Saturday, 20 July 2019

வார்த்தை வன்முறை...

வாய் - நாக்கு, பல், உதடு,அன்னம்  இவையனைத்தும் சேர்ந்த ஒன்று.  இவைகளில் ஒன்று  அல்லது  இரண்டின் உதவி இல்லாமல் வார்த்தை உருவாவது இல்லை. ஏதாவது ஒரு வார்த்தையை உச்சரித்துப்பார்த்தால் தெரியும்.

இதில் நாக்கும் வாயும் மட்டும் மக்களிடம் ஏக வசனைங்களில் திட்டுவது  வாங்குவதுதான் ஆச்சர்யம்.  அறிவியல் படி பார்த்தால், மூளையின் உத்தரவுகளை, வார்த்தைகளின் மூலம், வாய் செயல்படுத்துகின்றது, . அதன் படி பார்த்தால் மூளைதான் காரணகர்த்தா.

இந்த வார்த்தைக்குத்தான் எத்தனை சக்தி. ஒருவரை வாழவும் வைக்கும்,  வீழவும் வைக்கும்.  மென்மையான மனம் கொண்டவர்களை காயப்படுத்த ஒரு வார்த்தை போதும்,  மனது துவண்டு, காலத்திற்க்கும் மாறத காயத்தை,  வலியை, பிரிவை ஏற்படுத்தும்.

சில சமயங்களில், நமது எண்ணத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாமல் போய்விடுகின்றது.  பண்பட்ட மனது அமைதியை தழுவிக்கொள்கிறது.  எந்த ஒரு விளக்கமும், அர்த்தமற்று போகின்றது. எல்லோராலையும் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள இயலுவதில்லை. புரிந்து கொள்ள விருப்பப் படுவதும் இல்லை. அளவுக்கு அதிகமான வலி, அமைதியில் நிறைகிறது. கனத்த அமைதி வெளிப்படுத்தும் தாக்கத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடிவதில்லை.

எனக்கு தெரிந்து ஒரு சிலர், நட்பு மற்றும் உறவு வட்டத்தில். பணி இடத்திலும் கூட. வார்த்தையால் நம்மை கூறி கிழிக்க வல்லமை உடையவர்களாக இருக்கிறார்கள்.  அகராதியில் இத்தனை வார்த்தைகளா என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு வார்த்தை பிரயோகம்.  காயப்படுத்த வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன், காயப்படுவோம் என்று தெரிந்தே வார்த்தை உபயோகங்கள்.

நான் சில சமயங்களில், இறைவன் ஏன் இந்த வாயை படைத்தான் என நினைத்ததுண்டு.  அவர்களால்  பேசாமல் அமைதியாக இருக்க முடியாது, இருக்க தெரியாது.  ஐந்து பேருடன் பேசும் போதும் ஐம்பது பேருடன் பேசும் அளவு சத்தமாக பேசுவார்கள்.   ஒரு விதத்தில்
பரிதாபமானவர்கள். என்ன செய்ய!  மனதளவில் எதோ ஒரு பாதிப்பு அல்லது பயத்துடனே இருப்பவர்கள். நான் அடிக்கடி சொல்வது போல, "இயலாமை என்கிற எருமை" மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

இயலாமையின் வெளிப்பாடுதான் கோபம், அழுகை கூச்சல் எல்லாம். உலக இயக்கத்தையே தன் விருப்பப்படி வேண்டுபவர்கள். "அறியாமை என்கிற இன்னொரு எருமை".  ஒவ்வொரு மனிதனும் ஒரு சில எல்லைக்குட்பட்டவன் என்றோ, ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான கால அளவு உண்டென்கிற  புரிதலோ  இல்லாமை.  வேடிக்கை என்னவென்றால்,  இதில் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லை. 

நாம் உபயோகிக்கும் வார்த்தைகள் நம்மை யாரென்று உலகுக்கு உணர்த்தும்.   நமது ஆடை அபரணமோ, நுனி நாக்கு ஆங்கிலமோ நன்றாக இருந்தால் மட்டும் போதாது. நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், வார்த்தையின் வடிவமும் மிகவும் முக்கியம். 

வார்த்தை தவறி விட்டால்....?







No comments:

Post a Comment