Monday, 12 April 2021

செத்துவிடவில்லை

செத்துவிடவில்லை
நான் 
இன்னும்
செத்துவிடவில்லை.

பல நூறு யோசித்து
பலவாறாய் நேசித்து
பற்பலவாய் யாசித்து
பல்லாயிரமாய் பிரிந்து
பிரளயமாயமானது
மனது.

கனவுகளில்
கோட்டை கட்டி
வானில் பறக்க
நாட்டையாள
கற்ற கல்வி
உற்று
உலகம் சுற்ற.

அவளாய் இவளாய்
பிடித்த பாத்திரத்தில்
தன்னைப் பொருத்தி
கற்பனையிலே
அரிதாரமெடுத்ததென்ன
"நின்று கொண்டு
கனவு காண்"
என்ற என்ற
போதனைைைய மீறி!

தொட்டுவிடும்
தூரம் தான்
வானம்
என்ற சொலவடை 
உண்மையென நம்பி. 

தொடவில்லை
வானத்தை
தொட முடியவில்லை
வாழ்க்கையின்
வேகத்தை

பிடிபடாததால்,
அதற்கு
என்னைப்
பிடிக்காததால்.

இருப்பினும் 
இச்சிறிய
காகிதம் தாங்கும்
எனது பெயர்

மழைத்துளி பட்ட
வேராய்
சிலிர்த்து
துளிர்கிறது.

Saturday, 27 March 2021

இடுகாடு

 நிலையாமையை

நிலைத்து

நித்தமும் 

நினைவூட்டும்

தானியங்கி எரிவாயு

கூடம். 


நம்மை

தன்னில்

உள்வாங்கி

விரல்

சொடுக்கிய

வினாடியில்

விடைதெரியா

வாழ்க்கையின்

எச்சத்தை

வெளித் தள்ளி.


ஊர் கோடியின்

மயானத்தில்

அமைதியாய்

நின்றிருக்கும்

தகர கொட்டாய்


நகர 

நெரிசலினிடையே

இடுக்கி கொண்டு

பிறவிப் பெருங்கடலை

நித்தமும் நீந்தும்

மானிட இனத்தின்

நிலையாமையின்

நினைவு சின்னமாய்

நிற்கிறது

 இந்த

மின் இடுகாடு.

வெளிகள்

 அண்ட வெளி

பால் வெளி

வெட்ட வெளி


வெளிகள் எல்லாம்

வெளிச்சங்கள்


பிண்டங்கள்

மட்டும்

இருளிருளாய்.

Wednesday, 6 May 2020

தடுமாறும் தொண்ணூறு..


தளர் நடை
வளர் தாடி
நடுங்கும் கைகள்
இடுங்கிய கண்கள்
வறண்ட பார்வை

இறுகிய முகம்
ஒடிங்கிய தேகம்
நடுங்கும் கால்கள்
கையில் பிரம்பு

பகல் வேளைகளின்
இருக்கையே
சில நேரங்களில்
படுக்கையாய்

வயதையும்
வறுமையின்
விரக்த்தியையும்
விஞ்சி நிற்கிறது
உயிர் வாழ்தலின்
தேவை.

சாதிக்கவோ
சுவாசிக்கவோ
ஏதுமில்லைதான்
இனி.

கட்டிய மனைவி
இரண்டடி
மரப் பலகையில்
ஒற்றை நாடியாய்
நடையற்று
கிடந்த பின்

அதிகமான
உயிர் வாழ்தலின்
தேவை

தானில்லா
உலகில்
தாயற்ற
குழந்தையாகி
விடுவாளோ
என்றுதான்.

Sunday, 29 March 2020

பிட்சை.

யாசித்தலின்
மறு பெயர்
பிட்சை..

யாசித்து
வருவதற்கும்
இறைஞ்சி
வேண்டுவதற்கும்
கேட்டு
பெருவதற்குமான
ஒன்று அல்ல
அன்பு.

ஊற்றாய்
பெருகி
உணர்வில்
கலந்து
நினைவில்
நித்தம்
நிற்பதே
நேசம்.

Thursday, 6 February 2020

வலியோடு வாழ்க்கை

கைவலி கால்வலி
என்று என்றோ
ஆரம்பித்த வாழ்க்கை,
இன்று ,
தலைவலி பல்வலி
என
பலவலிகளடங்கியதாய்,
மன வலியையும்
சேர்த்து.

எங்குதான் வலிக்காதோ
என்று கல்லூரி
ஆசிரியை கேட்டபோது
வலித்ததுதான் மனது
லேசாக.

இருபத்தி ஐந்து
ஆண்டுகளுக்கு
பின்னும்
வலி கொண்ட
வாழ்க்கையே
பூரணமாய்.

நிற்க நடக்க
மருத்து
சிந்தனை
மறத்து
சிரிப்பு அற்று
கிடந்தே கிடப்பதே
உரிய உணர்வாய்

வாழ்க்கையின்
இயக்கத்தை
அர்த்தத்தை
கேள்விக் குறியாக்கி

தசை சதை
எலும்பு மஜ்ஜை
விரல் நகம்
என
முட்களாய் வலி
உச்சி முதல்
உள்ளங்கால் வரை
உருள,

உடல் மனம் ஆன்மா
மூன்றும்
நேர்க்கோட்டில்
இயைய மறுத்து
இயக்கமின்றி

சந்திர சூரிய
கிரகணமாய்
ராகு கேது
பிடியின்
இருள் கவிழ்ந்து

மரண
வலி நிறைந்த
வாழ்க்கையை
தினம் ஒரு
யுகமாய் கடக்க

சாதனை  சாத்தானை
மனம் எங்கே கொள்ள?
















Saturday, 14 September 2019

இருக்கை ....

தூரத்து
வெளியில் 
செடிகளசையும்
அழகைப் பார்க்க
அது சொல்லும்
செய்தி கேட்க
ஜன்னலோர
இருக்கையையே
தேர்ந்தெடுத்த
நான்,

சுவரைப் பார்த்த
இருக்கை கிடைத்தபோது
அமைதியானேன்,

காந்தியின்
மூன்று முத்துக்களில்
ஒன்றையாவது
எடுத்து
அணிந்து கொள்ள
தீர்மானித்து.

சொல், சைகை
மொழியின்
இரண்டு கண்கள்.

இருந்தும்,

சைகையே
அர்தத்தின் நாடியாய்
பிரதானமாய் போகிறது,
மொழி கடத்தும்
செய்திக்கு.

படிப்பு பண்பு
கல்வி கலாச்சாரம்
இவை
இடையே
வந்தவைகளென
உறுதியிட்டு

தனது
புறத்தோற்றத்தை
புறந்தள்ளி
புறம் பேசுதலே
அகம்
அறமாக கருதும்
மானிட
முகங்களைவிட

தன்னுள்
புதைத்த
இரகசிங்களால்
கல்லாய்போன
கல்லாலான சுவரே
மேலெனக்கருதி !