Saturday, 14 September 2019

இருக்கை ....

தூரத்து
வெளியில் 
செடிகளசையும்
அழகைப் பார்க்க
அது சொல்லும்
செய்தி கேட்க
ஜன்னலோர
இருக்கையையே
தேர்ந்தெடுத்த
நான்,

சுவரைப் பார்த்த
இருக்கை கிடைத்தபோது
அமைதியானேன்,

காந்தியின்
மூன்று முத்துக்களில்
ஒன்றையாவது
எடுத்து
அணிந்து கொள்ள
தீர்மானித்து.

சொல், சைகை
மொழியின்
இரண்டு கண்கள்.

இருந்தும்,

சைகையே
அர்தத்தின் நாடியாய்
பிரதானமாய் போகிறது,
மொழி கடத்தும்
செய்திக்கு.

படிப்பு பண்பு
கல்வி கலாச்சாரம்
இவை
இடையே
வந்தவைகளென
உறுதியிட்டு

தனது
புறத்தோற்றத்தை
புறந்தள்ளி
புறம் பேசுதலே
அகம்
அறமாக கருதும்
மானிட
முகங்களைவிட

தன்னுள்
புதைத்த
இரகசிங்களால்
கல்லாய்போன
கல்லாலான சுவரே
மேலெனக்கருதி !

Saturday, 20 July 2019

வார்த்தை வன்முறை...

வாய் - நாக்கு, பல், உதடு,அன்னம்  இவையனைத்தும் சேர்ந்த ஒன்று.  இவைகளில் ஒன்று  அல்லது  இரண்டின் உதவி இல்லாமல் வார்த்தை உருவாவது இல்லை. ஏதாவது ஒரு வார்த்தையை உச்சரித்துப்பார்த்தால் தெரியும்.

இதில் நாக்கும் வாயும் மட்டும் மக்களிடம் ஏக வசனைங்களில் திட்டுவது  வாங்குவதுதான் ஆச்சர்யம்.  அறிவியல் படி பார்த்தால், மூளையின் உத்தரவுகளை, வார்த்தைகளின் மூலம், வாய் செயல்படுத்துகின்றது, . அதன் படி பார்த்தால் மூளைதான் காரணகர்த்தா.

இந்த வார்த்தைக்குத்தான் எத்தனை சக்தி. ஒருவரை வாழவும் வைக்கும்,  வீழவும் வைக்கும்.  மென்மையான மனம் கொண்டவர்களை காயப்படுத்த ஒரு வார்த்தை போதும்,  மனது துவண்டு, காலத்திற்க்கும் மாறத காயத்தை,  வலியை, பிரிவை ஏற்படுத்தும்.

சில சமயங்களில், நமது எண்ணத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாமல் போய்விடுகின்றது.  பண்பட்ட மனது அமைதியை தழுவிக்கொள்கிறது.  எந்த ஒரு விளக்கமும், அர்த்தமற்று போகின்றது. எல்லோராலையும் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள இயலுவதில்லை. புரிந்து கொள்ள விருப்பப் படுவதும் இல்லை. அளவுக்கு அதிகமான வலி, அமைதியில் நிறைகிறது. கனத்த அமைதி வெளிப்படுத்தும் தாக்கத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடிவதில்லை.

எனக்கு தெரிந்து ஒரு சிலர், நட்பு மற்றும் உறவு வட்டத்தில். பணி இடத்திலும் கூட. வார்த்தையால் நம்மை கூறி கிழிக்க வல்லமை உடையவர்களாக இருக்கிறார்கள்.  அகராதியில் இத்தனை வார்த்தைகளா என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு வார்த்தை பிரயோகம்.  காயப்படுத்த வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன், காயப்படுவோம் என்று தெரிந்தே வார்த்தை உபயோகங்கள்.

நான் சில சமயங்களில், இறைவன் ஏன் இந்த வாயை படைத்தான் என நினைத்ததுண்டு.  அவர்களால்  பேசாமல் அமைதியாக இருக்க முடியாது, இருக்க தெரியாது.  ஐந்து பேருடன் பேசும் போதும் ஐம்பது பேருடன் பேசும் அளவு சத்தமாக பேசுவார்கள்.   ஒரு விதத்தில்
பரிதாபமானவர்கள். என்ன செய்ய!  மனதளவில் எதோ ஒரு பாதிப்பு அல்லது பயத்துடனே இருப்பவர்கள். நான் அடிக்கடி சொல்வது போல, "இயலாமை என்கிற எருமை" மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

இயலாமையின் வெளிப்பாடுதான் கோபம், அழுகை கூச்சல் எல்லாம். உலக இயக்கத்தையே தன் விருப்பப்படி வேண்டுபவர்கள். "அறியாமை என்கிற இன்னொரு எருமை".  ஒவ்வொரு மனிதனும் ஒரு சில எல்லைக்குட்பட்டவன் என்றோ, ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான கால அளவு உண்டென்கிற  புரிதலோ  இல்லாமை.  வேடிக்கை என்னவென்றால்,  இதில் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லை. 

நாம் உபயோகிக்கும் வார்த்தைகள் நம்மை யாரென்று உலகுக்கு உணர்த்தும்.   நமது ஆடை அபரணமோ, நுனி நாக்கு ஆங்கிலமோ நன்றாக இருந்தால் மட்டும் போதாது. நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், வார்த்தையின் வடிவமும் மிகவும் முக்கியம். 

வார்த்தை தவறி விட்டால்....?







Monday, 15 July 2019

காட்சிப் பிழை...

காட்சி மாறவில்லை
களம் மாறியும்.

"ஏய் எருமை"
சற்றே மாறிய
குறில் நெடிலோடு
அதே அடைமொழி
மாணக்கர்களுக்கு.

துறை அறையில்
தொல்லைகள் தொடர
சிலருக்கு பலர்
சிலராய் ஒருவர்
நாடகத்தின் அனைத்து
பாத்திரங்களும் ஏந்தி.

கேலி கிண்டல்
ஒற்றி தொற்றி
தொற்றாய்
வார்த்தைகள்

அல்ல
சத்தங்கள்
அர்த்தங்கள் இல்லா
பேச்சுக்கள்

வயதை மீறிய வார்த்தை.
விவேகத்தை அறியா வயது
வயதை முந்திய பதவி
பதவி தந்த கர்வம்

சபை நாகரிகமோ
பணிவோ அற்ற
அகராதி.

கல்லூரி சாலை
காட்சி பொருளாய்
கூச்சல் கூடமாய்

பட்டம் பதவி பணி
சாரமின்றி

ஞான
வெளிச்சமின்றி
சூனியமாய்
நானும்
அவ்வப்போது.



Saturday, 29 June 2019

- - - எனும் நான்.

மரணமும் போரும்
விடுதலையை தரும்
சில நேரம்
வெற்றியையும்.

மீட்கவே இயலாத
பொருளிழப்பை
நேரத்தை
மானத்தை
மரண வலியை
தந்தாலும்.

முட்களால்
குத்திக் கீறி
ரணமாக்கி
தன்னை வருத்தி
தன் வலி மறத்து
சதைப் பிய்ந்து
நாராய் தொங்க

ரத்தம்
சொட்ட சொட்ட
கோரைப் பற்கள்
நீண்டு
தன்னுரு
இழந்து மறந்து

நா தள்ளி
மூச்சிறைக்க
பலி கொள்ள
அலைந்து
அமைதியை
கிழித்து குலைத்து
இரைகளற்று,

தீமையும் தானும்
உருமருவி
ஒன்றாய்
அதுவே இதுவாய்
மீட்டெடுக்க இயலாது
உருக்குலைந்து
கோரமாய்

இறுதியில்
தான் வைத்த தீயில்
மெல்ல மெல்ல
தானே
இரையாகி
விட்டு
விடுதலையாகி
தீயின் நாவிற்கு
சுவையாகி

வலி மிகுந்த
வாழ்க்கையின்
எல்லை வரை
மீண்டும்
போராடி

மீளா துக்கத்தில்
ஆழ்த்தி
தோல்வியை தழுவி
வீழ்த்தும்
வல்லமை கொண்டேன்
- - - -  எனும் நான்.

Thursday, 27 June 2019

கண்ணாடி

அந்த வீட்டின்
அகண்ட கூடத்தில்
ஆளுயுர நான்.

என் முழு நேர பணி
பிரதிபலிப்பதே ,
உருவத்தை மட்டுமல்ல.

குறுக்கும் நெடுக்குமாக
அவ்வீட்டில் மக்கள்
நடக்கும் போது
அறிந்தும் அறியாதது போல
அவர்கள் பார்வை
என் மேல்.

அநேக நேரங்களில்
தன் உருவ அமைப்பே
மனதில்

சிகை திருத்தி
மீசை முருக்கி

வகிடெடுத்து
மையிட்டு.


எத்தனை பேர்
எத்தனை நாள்
பார்வை
என் மேல் .

ஆனால்
என்னை ஒரு தரமேனும்
ஏறிட்டுப்
பார்க்காது

என் இருத்தலையும்
தன் இருத்தலையும்
உணராத

உருவம் அழகு
எண்ணங்கள்
வண்ணங்கள்
என
வாழ்க்கையின்
சாரமற்று

என்னையும்
சாரம் போனதாய்.

ஒரு முறையேனும்
ஏறெடுத்துப் பார்க்காத
அவளின்
மனதை
 மட்டுமல்ல
முகத்தையும்
நானறியேன்.

Sunday, 26 May 2019

ஜன்னல்...

நீண்ட இடைவெளிக்குப்பின் இன்று இரவு வாக்கிங் சென்றேன். இரவு நேர வாக்கிங் மனதுக்கு பிடித்தமான ஒன்று. வாக்கிங் செல்லும்போது தெருவோரம் இருக்கும் வீடுகளை பார்த்துக்கொண்டே நடந்தேன்.  பிரமிப்பு ஒரு பக்கம் வருத்தம் ஒரு பக்கம்.  பெரிய இரண்டடுக்கு மாடி வீடு அருகில் மிகச்சிரியதாய் ஒண்டுகுடித்தனம்.  ஒரே தெருவில் இருந்தாலும், நம் நாட்டில் வீடுகளின் அளவும் அழகும் மாறுபடும். பல வெளி நாடுகளில் ஒரே மாதிரி வடிவமைப்புடன் வரிசையாய் வீடுகள் இருக்கும். அது அங்கு உள்ள சட்டம். நம் வீடுகள் போன்றே நம் சட்டங்களும்.

சினிமாவில் மிக பிரபலமான தயாரிப்பாளரின் பெயர் தாங்கிருந்தது அந்த வீடு. வீடு என்பது சாதாரணமான ஒரு வார்த்தை, ஒரு குறியீடு. இருப்பிடம் வீடு என்றால் அது வீடுதான். மற்றபடி நம் கண்களுக்கும், நினைவிற்க்கும் பழகிப்போன ஒன்றிலிருந்து வேறுபட்ட கட்டிடம். அவர்களுக்கு அது வீடு. ஒன்றரை ஆளடி உயரம் சுற்றுச்சுவர்.  உள்ளே, இரண்டடுக்கு மாடி. கட்டிட அமைப்பில் சற்று வித்யாசத்தை உணர்ந்து, மறுபடி நோக்கினேன். ஜன்னல் இல்லா வீடு. பளிரென வெள்ளை நிறம் போர்த்தியபடி.

என் வீட்டை சுற்றி மரம், செடி, கொடி, சில நேரம் பராமரிப்பின்றி. நான் வீட்டிலிருந்தால் எல்லா ஜன்னல்களும் திறந்து இருக்கவேண்டும். என் அத்தை திட்டிக்கொண்டே இருப்பார், விஷ ஜந்துக்கள் (புரிகிறதா?) நடமாட்டம் இருக்கும் என. நேற்று கூட போனில் பேசும்போது சொன்னார், இரண்டு நாட்களுக்கு முன் வீட்டு வராண்டாவில் படுத்து இருந்ததது என்று. உலகத்தில் நான் பயப்படும் ஒரே விஷயம் அது ஒன்றுதான்.

மின் வெட்டு இருக்கும் நேரங்களில், கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு எல்லா ஜன்னல்களையும் திறந்து வைத்துவிட்டுத்தான் தூங்குவேன். காற்றோட்டம் இல்லாமல் என்ன?  காற்று வேறு, காற்றோட்டம் வேறு.  நம்மில் பல பேருக்கு வித்யாசம் தெரிவதில்லை. 

நகரத்தில், சென்னை மாநகரத்தில்,  விஷ ஜந்துக்கள்  நடமாட்டம் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அதைவிட ஆபத்தான ஜந்துக்கள் இருப்பதாலோ?
எது எப்படி இருப்பினும், ஜன்னல் இல்லா வீடு எப்படி வீடு என்ற உணர்வை தரும்? மனது அயர்ந்த நேரத்தில்,  துவண்ட நேரத்தில், தன்னை மறந்து நிற்க, ஒரு ஜன்னல். எதிர் வீட்டு மாடியில் அமர்ந்திருக்கும் குருவி,  ஒற்றை தென்னை மரம், அதனடியில், உச்சி வெயிலில் துணி அயன் பண்ணும் அம்மா,  என எதாவது ஒன்று. 

உலகை உணர, அகமும் புறமும் அறிய, தன்னிலை மீள என ஜன்னல்கள் என் வீட்டில்.    
               





















Saturday, 25 May 2019

ஜன்னலில்லா வீடு


ஜன்னல் வாயிற்படி
இவையிரண்டும்
இரு கண்ணாய் வீட்டுக்கு.

ஒன்றாவது திறந்து
ஒற்றை கண்ணாய்
வழிவிடும் காற்றுக்கு
பல வீடுகளில்.

தியானத்திலிருந்து
மீண்டு
எப்போவாவது 
திறந்து மூடும்
ஒற்றை கண்
சில வீடுகளில்

உயர்ந்த சுவற்றுடன் 
ஜன்னலில்லா
சில பெருந்தகைகள்
வீடு.

மூச்சு முட்டதோ?

காற்றாய்
புத்தி, அறிவு, ஞானம்.
காற்றே  உயிர்.   

எங்கள் வீட்டில்
இரண்டும் திறந்திருக்கும்
ஊர் உறங்கும் நேரம்
தவிர.

Thursday, 9 May 2019

சாம்பார் சாதமும் புளிகாச்சல் சைடிஷ்ம் ...

 தலைப்பிற்க்காக தமிழ். 

நீங்கள் சாம்பார் சாதம் ஆர்டர் பண்ணும்போது என்ன சைடிஷ் எதிர்பார்ப்பீர்கள்? அப்பளம், உருளை கிழங்கு, முட்டைகோஸ் பொரியல், எலுமிச்சை ஊறுகாய். இவைகளில் ஒன்றோ இரண்டோ, எதுவும் இல்லையென்றால் ஊறுகாயாவது.   

இன்று அருகிலுள்ள கல்லூரியில் பணி. எனக்கு வழக்கத்திற்கு மாறாய் வேறு ஒரு இடம் செல்வது அவ்வளவாக பிடிக்காது என்றாலும், கடமையை செய்ய வேண்டிய கட்டாயம்.  விருப்பு வெறுப்பிற்கும்,  முடியும் முடியாமைக்கும் இடம் இல்லை.  

இன்று வியாழக்கிழமை. காலை சாப்பாட்டிற்கு நோ. அளவிற்கு அதிகமாய் கால் வலி, கடுமையான வெயில், பசி, மூன்று மணி நேரம் நின்று கொண்டிருந்தது,  அனைத்தும் ஒன்று சேர்ந்தது. சில சமயம், ஏன் கஷ்டப்படுகிரோம் என்று தெரியமலே போய்விடுகிறது. உணர்வதுக்கு நேரம் இல்லை. அல்லது, நேரம் ஒதுக்குவது இல்லை. உணர்ந்தாலும் ஒன்றும் செய்ய முடிவதில்லை பல சமயங்களில்.  

சில வேலைகள், ஒருவிதமான ஆயாசத்தை தந்து விடுகின்றன.  பிடிக்காத அல்லது இயலாத ஒன்றை - உடலுக்கு, மனதுக்கு, அறிவிற்கு, அல்லது ஆன்மாவிற்கு ஓவ்வாத வேலைகள் செய்யும்போது, தண்டனையாகவே மனது எண்ணுகிறது.

இறுதி தீர்ப்பு நாள் மாதிரி. தண்டைனையில்  இருந்து தப்பிக்க முடியாது. தண்டனையின் தீவிரமும், கால அளவும் மாறுமே தவிர.   

பேப்பர்களை கொடுத்தபிறகு, மத்திய உணவிற்கு சென்றோம். ஒரு அட்டைப்பெட்டி இருந்தது, அதில், சாப்பாட்டு பொட்டலங்கள் இருந்ததன. அருகில், சில சப்பாத்திகள் இருந்தன.  நாங்கள், சப்பாத்தியை எடுத்துக்கொண்டு தொட்டுக்கொள்ள எதாவது இருக்கிறதா என்று பார்த்தோம். ஒரு பாட்டில் இருந்தது. சந்தேகத்துடன் திறந்தேன். உள்ளே தக்காளித் தொக்கு. சிறிது எடுத்துக்கொண்டு அமர்தோம். சப்பாத்தி மிருதுவாய் இருந்தது. தொக்கு கெட்டியாக இருக்கும். இன்னும் இங்கே தண்ணீர் பற்றாக்குறை இல்லை போல்.  பரவாயில்லையே என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போது, தொக்கு தீர்ந்து விட்டது. பாதி சப்பாத்தி வெறுமே சாப்பிட வேண்டியதாயிற்று.   ஒரு சாப்பாட்டு பொட்டலதை  பிரித்து ஆளுக்கு கொஞ்சம் எடுத்தோம். அதில் உள்ள
ஊறுகாயை எடுத்து நாக்கில் வைத்தேன்.  வித்யாசமான, புளி சாதத்திற்கான சுவை.   அடுத்த நொடி, வேர்க்கடலை கையில் பட்டதும், சந்தேகம் தீர்ந்தது.  

ஆச்சர்யம் ஆனால் உண்மை, வாழ்நாளில் முதன்முறையாக, சாம்பார் சாதத்திற்கு புளிகாச்சல் சைடிஷ்!  அப்பளமும், வறுவலும், வெங்காயமும் தேடிய நாள் எங்கே? நாவுதான் எங்கே?   எது எப்படியோ, பசித்த நாவிற்க்கு சாம்பார் சாதமும், புளிகாச்சலும்  தேவாமிர்தம்.   

வாழ்க்கையின் புற சூழ்நிலைகள் மிகசிரமமாகவே இருந்தாலும், எதையும் யாரிடமும் சொல்லி புரியவைக்க வேண்டிய நிலையை கடந்து,மனதோ, அமைதியாக இருந்தது, அனைத்தையும் வேடிக்கைபார்த்தபடி. 


Friday, 15 March 2019

வெற்றிப்புள்ளி

வெற்றியின்
ஆரம்பப்புள்ளி

காலை
பேருந்தை
பிடிப்பதில்தான்.  

காப்பி, காஃபி, காபி..

என் தோழிக்கு
இரவு உணவுக்குப்பின்
புகையிலை
எனக்கு
காபி.

சுள்ளென்ற
காரத்திற்குப்பின்
கட்டாய
இலவச இணைப்பாய்.
இனிப்பு குறைவாய்
சற்றே
டிக்காக்ஷன் தூக்கலாய்.

காப்பி, காஃபி, காபி
வித விதமான
பெயர்கள்.

சுக்கு காப்பி
பிளாக் காபி
ஈப்போ
வொயிட்  காபி
டிகிரி காஃபி
எஸ்பிரெஸ்ஸோ
காபிச்சீனோ
பல சுவைகள்
பல நிறங்கள்.

பிரேசில்
துருக்கி
குடகு
ஊருக்கு ஒரு
தன்மை.

காபியில்
நிறமோ
மணமோ
எதுவோ

பொழுதுபோக்கு பானம்
பொழுதை போக்கும் உத்தி.

அடடே...

காபி அரசியல்
காஃபி கலாச்சாரம்
காஃபி ராஜ்ஜியம்
காப்பி மனிதர்கள்

காலை எழுந்தவுடன்
காஃபி
மதிய உணவிற்குப்பின்
ஒரு கப் காஃபி
மாலை முழுதும்
ஒன்றோ ரெண்டோ
காஃபி

மனதுக்கு இதமாய்
பில்டர் காபி

உணர்வாய், உருவாய்.
புத்திக்கு உணவாய்...








கிழிந்த செருப்பு

கிழிந்த செருப்பும்
அறுந்த செருப்பும்
வெவ்வேறுதான். 

இரண்டின் 
நிலையும் வேறு 
கதையும் வேறு.
சிலர் வாழ்க்கையும்.  

அருந்த செருப்பிற்கு 
எதிர்காலமுண்டு,  
தைத்தால்.    
கிழிந்த செருப்புக்கு 
 காலமே இல்லை.

தலை இழுத்தால் கால் தெரியும் 
கால் இழுத்தால் தலை தெரியும்.

ஆமாம், 
செருப்பிற்கு 
தலை ஏது 
கால் எது ?

எது என்னவோ,
பற்றாக்குறைதான், 
இழுத்து தைக்க முடியாத 
பற்றாக்குறைதான்.

பற்றாக்குறை 
செருப்பிலுள்ள
தோலில் மட்டுமல்ல.

பற்றாக்குறை 
தோலிலான பையிலும்
தோல் மூடிய 
மனதிலும்.